×

கடை ஊழியரை தாக்க வந்தபோது தடுத்த பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

சென்னை: அண்ணா சாலையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் முன்விரோதத்தால் கடை ஊழியரை தாக்க வந்த போது, தடுக்க முயன்ற பொதுமக்களை கத்தியை காட்டி ஓட ஓட விரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல வணிக வளாத்தில், கண் கண்ணாடி, ஷூ, செல்போன் கடைகள் என 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள கண்ணாடி கடையில் வியாசர்பாடி, கல்யாணபுரத்தை சேர்ந்த கேசவன் (22) வேலை செய்து வந்துள்ளார்.  அதைப் போன்று ஆயிரம் விளக்கு, அழகிரி நகரை சேர்ந்த ஆண்டனி (எ) ஆண்ட்ரே (19) என்பவர் அருகில் உள்ள ஷூ கடையில் இரண்டு மாதங்களாக வேலை செய்து விட்டு நின்று விட்டார். இருவருக்கும் இடையே ஏற்கனவே பிரச்னைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இரவு 8 மணியளவில் வணிக வளாகத்துக்கு வந்த ஆண்டனி, கேசவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கேசவன் அவரை அடித்துள்ளார்.  அதன் பிறகு அங்கிருந்து சென்ற அவர் நேற்று முன்தினம் மறுபடியும் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள பிளாட்பாரத்தில் வசித்து வரும் வேப்பூர் பகுதியை சேர்ந்த நடராஜன் (20) என்பவருடன் வந்து கடையில் வேலை செய்து கொண்டிருந்த கேசவனை அடித்துள்ளார். அப்போது அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் அவர்களை பிடிக்க முயன்றதும், திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளை இருவரும் எடுத்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களை வெட்ட முயன்றனர்.
இதை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் சிதறி ஓடினர். இதனால் வணிக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி ஆயிரம் விளக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கத்தியை காட்டி மிரட்டிய 2 பேரையும் மடக்கி பிடித்தனர். இருவரும் மீதும் ஐபிசி 294(பி), 341, 324, 506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.  இந்த சம்பவத்தால் வணிக வளாகத்தில் சிறிது நேரம் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.



Tags : men , Shop employee, civilians, 2 people arrested
× RELATED பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 3 பேர் கைது!